ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் மவுலி (25). இவர் காங்கேயத்தில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்துவந்தார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி முதல் மவுலி வீடுவந்து சேராததால் அவரது பெற்றோர், அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் மவுலியின் பெற்றோர் 24 ஆம் தேதி மொடக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
பார் உரிமையாளர் சரண்
இதற்கிடையே ஈரோடு லக்காபுரத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வரும் சரவணன் (53). தானும், தன்னுடன் சேர்ந்து மேலும் 3 நபர்களுடன் சேர்ந்து மவுலியை கொலை செய்து, காலிங்கராயன் வாய்க்காலில் பிணத்தை வீசிவிட்டதாக கூறி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
பணம் கேட்டு தகராறு
இந்நிலையில் சரவணன் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘ஈரோடு லக்காபுரத்தில் நடத்தி வரும் டாஸ்மாக் பாருக்கு மவுலி அடிக்கடி வருவார். என்னிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபடுவார். கடந்த 20ஆம் தேதியும் வழக்கம்போல் வந்த மவுலி என்னிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் என்னுடைய குதிரை பண்ணையில் வேலை பார்க்கும் ஊமையன் என்கின்ற சிவகுமார் (26), பாரில் வேலை பார்க்கும் பிரதாப் (27), குணா என்கிற குணசேகரன் (33) ஆகியோருடன் சேர்ந்து மவுலியை கொன்று உடலை காலிங்கராயன் வாய்க்காலில் வீசிவிட்டேன் எனக் கூறினார்.
விசாரணை
இதைத்தொடர்ந்து சரவணனை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஊமையன் என்கினற சிவகுமார், பிரதாப், குணா என்கிற குணசேகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கடலூர் தாய்-மகள் கொலை வழக்கு - இளநீர் வியாபாரி கைது!