ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள காவிலிபாளையம் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 400 ஏக்கர் பரப்பளவிலான குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் தற்போது நீர் இல்லாததால் முள்புதர்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இந்நிலையில் குளத்தின் ஒரு பகுதியில் பொக்லைன் எந்திரத்தைப் பயன்படுத்தி டிராக்டர்களில் சிலர் கிராவல் மண் அள்ளப்படுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனர்.
இதில், அவர்கள் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளி கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஜேசிபி இயந்திரம், டிராக்டர்களைச் சிறைப்பிடித்த அப்பகுதி மக்கள் உடனடியாக வருவாய்த் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வருவாய்த் துறையினர், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காவிலிபாளையம் குளத்தில் கிராவல் மண் எடுக்க எந்தவித முன் அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்டியெடுத்து கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
இதில் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் அதிமுக கட்சியைச் சேர்ந்த பவானிசாகர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமிக்குச் சொந்தமானது என்பதும் தெரியவந்தது.
வாகனங்கள் பறிமுதல்
சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளியதாக வருவாய்த் துறையினர் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் ஜேசிபி இயந்திரம், டிராக்டர்கள் பறிமுதல்செய்து காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
எந்தவித முன் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்திச் செல்ல முயன்றபோது கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அதிமுக ஒன்றியச் செயலாளரின் ஜேசிபி இயந்திரம் பறிமுதல்செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தல்: இருவர் தப்பி ஓட்டம்