ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் 2018 –19ஆம் ஆண்டின் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் கேரளா ஆளுநரும், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுமான சதாசிவம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ”மும்பை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை நடைபெற்றபோது மும்பை நீதிமன்றத்திலிருந்து தொலைபேசி வழியாக நேரடியாக பாகிஸ்தான் ஒட்டுக்கேட்ட விஷயத்தை கண்டுப்பிடித்த பிறகே உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது உள்ள நீதிபதிகள் மேகாலயா போன்ற மாநிலங்களுக்கு நீதிபதிகளாக நியமனம் செய்தால் அங்கு சென்று பணியாற்ற விரும்புவதில்லை.
இதே போல் நானும் வேறு மாநிலங்களில் பணியாற்ற முடியாது என்று சொல்லியிருந்தால், கிராமத்தில் விவசாயம் செய்து, மாடு மேய்த்துக்கொண்டுதான் இருந்திருப்பேன். நீதிபதிகள் இந்தியாவின் எந்த பகுதிக்கும் சென்று நீதிபதிகளாக பணியாற்ற தயாராகவும் கடமை உணர்வு மிக்கவராகவும் இருக்க வேண்டும்.
மாணவ, மாணவிகள் கடமை உணர்வுமிக்கவராகவும், அறிவாற்றலுடனும் திகழ வேண்டும். பட்டம் பெற்று பணிக்கு செல்பவர்கள் எந்த ஊராக இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்பட செய்யவேண்டும். அதனால் நீங்கள் எதிர்பார்க்காத பயன்கள் வந்து சேரும்” என்றார்.
இதையும் படிங்க:தேர்வில் முறைகேடென மனு பதிலளிக்குமா? டி.என்.யூ.எஸ்.ஆர்.பி