ஈரோடு மாவட்டம், தாளவாடியில் இருந்து கெட்டவாடி செல்லும் அரசுப் பேருந்தில் ஓட்டுநராக ரமேஷ், நடத்துநராக மகேஷ் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல் நேற்று கெட்டவாடியில் இருந்து தாளவாடி திருப்பிக்கொண்டிருந்தபோது பேருந்தில் குறைவான பயணிகளே இருந்தனர்.
அப்போது பேருந்தின் சீட்டின் அடியில், ஏதோ ஒரு பொருள் இருப்பதைக் கண்ட நடத்துநர், என்னவென்று பார்த்தபோது, அது பெண்ணின் தாலி என்பதும் பேருந்தில் பயணம் செய்த யாரோ தவறவிட்டுச் சென்றது என்பதும் தெரியவந்தது. இதை ஓட்டுநர் ரமேஷிடம் தெரிவித்தார்.
ஓட்டுநர் ரமேஷ் கெட்டவாடி செல்லும்போது பேருந்தில் பயணம் செய்த தனக்கு தெரிந்த நண்பர்களிடம் இது குறித்து விசாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நண்பர்களின் உதவியுடன் தாலியைத் தவறவிட்ட பெண் பயணி ரகனள்ளி கிராமத்தைச் சேர்ந்த துண்டம்மா என்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஓட்டுநர் ரமேஷ் மற்றும் நடத்துநர் மகேஷ் ஆகிய இருவரும் நேரில் சென்று அந்தப் பெண் தவறவிட்ட 5 சவரன் தங்க தாலியை ஒப்படைத்தனர்.
பெண் தவறவிட்ட நகையைப் பத்திரமாக திரும்ப ஒப்படைத்த நேர்மையான ஓட்டுநர் ரமேஷ் மற்றும் நடத்துநர் மகேஷ் ஆகிய இருவருக்கும் சக போக்குவரத்து தொழிலாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அதிகாரத்தைப் பயன்படுத்துமா கிராம சபைகள்?