ஈரோடு: கோபிச்செட்டிபாளையம் அடுத்த நிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவரது மனைவி பழனியம்மாள், கடந்த 2018ஆம் ஆண்டு அரசுப்பேருந்து மோதி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து இறந்துபோன பழனியம்மாளின் குடும்பத்தார் கோபிசெட்டிபாளையம் 3ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு நஷ்ட ஈடாக ரூ.7,37,800 தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. மேற்படி நஷ்ட ஈடு தொகையை அரசு போக்குவரத்துக் கழகம் செலுத்த முன்வராததால் கோபிசெட்டிபாளையம் 3ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அரசுப்பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இன்று கோபி பேருந்து நிலையத்திற்கு வந்த நீதிமன்ற ஊழியர்கள் அரசுப்பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸை திறக்க எப்படி அனுமதித்தீர்கள்? - ஐகோர்ட் கிளை