ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில், 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று (அக். 1) மாலை சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து தாளவாடி செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது 13 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற அரசு பேருந்து, மைசூரில் இருந்து திருப்பூர் செல்வதற்காக மலைப்பாதையில் எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதம் அடைந்தது. இதே போல் காரின் முன் பகுதியும் சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்து மற்றும் காரில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி வாகனத்தை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகை மறுப்பா? - ஈரோடு பெண் கண்ணீர் மல்க கோரிக்கை!