தமிழ்நாட்டில் சமையலுக்கு அதிகளவு பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரம் முதல் அதிகரித்துவருகிறது. கடந்த வாரம் சின்ன வெங்காயம் கிலோ ஒன்று ரூ.60-க்கு விற்பனை ஆன நிலையில் இந்த வாரம் கிலோ ஒன்று ரூ.100 முதல் 120 வரை விற்பனை ஆகிவருகிறது.
இனி வரும் நாள்களில் பண்டிகை, திருமண நிகழ்வுகள் காலம் என்பதால் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைம் அருகே உள்ள கொங்கர்காளையம், வினோபாநகர், வாணிப்புதூர், மோதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டிவருகின்றனர். ஒரு ஏக்கருக்கு 500 கிலோ வெங்காயம் தேவைப்படும் நிலையில் தற்போது விதை வெங்காயம் கிலோ ஒன்று ரூ.80 முதல் 100 வரை கொள்முதல் செய்து தீவிர நடவுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏக்கர் ஒன்றுக்கு தற்போது ரூ.50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை முதலீடு செலவு ஆகின்றதால், வரும் நாள்களில் சின்ன வெங்காயத்தின் விலை இதேபோல் இருந்தால் தற்போது நடவு செய்யும் விவசாயிகளுக்கு அதிகளவு லாபம் ஈட்டவாய்ப்புள்ளதாகவும் விலை குறைந்தால் விவசாயிகள் பெரும் இழப்புகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இப்பகுதியில் மட்டும் 100 ஏக்கருக்கும் மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவையனைத்தும் இன்னும் 90 நாள்களில் அறுவடை செய்யப்படவுள்ளன.
இதையும் படிங்க...உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் குளறுபடியா?