ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள தாசப்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெள்ளியங்கிரி, விமல்ராஜ். இவர்கள் இருவரும் வெளியூர் பகுதிகளில் தங்கி, கிணறு வெட்டுவதற்கும் கட்டட வேலைக்கும் சென்று வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் கரோனா தடுப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வேலைக்குச் சென்ற வெள்ளியங்கிரியும், விமல்ராஜூம் சொந்த ஊருக்குத் திரும்பினர்.
பின்னர் இருவரும் அப்பகுதி பொதுமக்களிடம் கட்டட வேலைக்கு வெளியூர் சென்ற நான்கு பேர் தாசப்பகவுண்டன்புதூர் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும்; அவர்களில் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதாகவும்; அவர்களை ஊருக்குள் நுழைய அனுமதிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கரோனா பீதியை ஏற்படுத்தியுள்ளனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகவலை அறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அங்கு நேரில் சென்று, கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வருகிறார்களா என ஊர் பொதுமக்களுடன் விடியும் வரை காத்திருந்தனர்.
ஆனால், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வராததால் வெள்ளியங்கிரி, விமல்ராஜ் கூறியது வதந்தி எனத் தெரியவந்தது. இது தொடர்பாக, பங்களா புதூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் தொழில் போட்டியால் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர் ஊருக்குள் நுழைவதாக வதந்தி பரப்பியது தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:'காட்டுவழியாக கேரளாவிற்குள் வந்தால் 28 நாள்கள் சிறை'