ஈரோடு: 'திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்' என்பார்கள், நம் முன்னோர். ஒருவருக்கு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் இன்ப, துன்பங்கள் அனைத்திலும் மனது ஒத்த தம்பதிகளாக மக்கள் பயணிக்கவேண்டியே இந்த 'சொல்லாடல்' பிறந்திருக்கவேண்டும்.
அப்படியொரு மனது ஒத்த தம்பதியே கருப்பையா-சித்ரா இணையினர். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட காந்தியவாதிகளான இருவரும், அகில இந்திய காந்திய இயக்கத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாகவும் உள்ளனர்.
காந்திய சிந்தனைகளோடு பயணித்த தம்பதியினர்:
நாட்டின் ஒற்றுமையை பொதுமக்களிடையே கொண்டுசேர்க்கும் வகையில், குஜராத், பீகார், ஒடிசா, காஷ்மீர், பஞ்சாப் என நாட்டின் பல்வேறு பகுதிகளை, கடந்த 31 ஆண்டுகளாக மிதிவண்டி மற்றும் நடைப்பயணம் மூலம் பயணித்து, சுமார் 96 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை காந்திய சிந்தனைகளைப் பரப்புரை செய்து கடந்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது, நாட்டிற்கு சுதந்திரம் அடைந்து பவள விழா ஆனதை ஒட்டி, கடந்த 2021 ஆகஸ்ட் 15ஆம் தேதி 'சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு சமர்ப்பண யாத்திரை' என்ற பெயரில் ஒரு நடைப்பயணத்தினை சென்னிமலையில் தொடங்கி, புதுச்சேரி நோக்கிப் பயணம் மேற்கொள்ளத்தொடங்கினர். செப். 11ஆம் தேதி பாரதியார் நினைவு நாள் அன்று புதுச்சேரியில் உள்ள தமிழ்ச்சங்கத்தில் நடைபயணத்தை நிறைவு செய்யவும் அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
விதி செய்த சதி:
அப்போது தான் அந்த கோரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2021 ஆகஸ்ட் 24ஆம் தேதி நாமகிரிப்பேட்டை செல்வதற்குள் நாய்கள் கடிக்க வரும்போது, நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு சித்ரா படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த விபத்தில் அவரது கால் மற்றும் இடுப்பு எலும்புகள் உடைந்துவிட்டன. இதனால், சித்ராவால் தனியாக எழுந்த செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பின், பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சித்ரா, தற்போது கோபிச்செட்டிபாளையம் அடுத்துள்ள 'ஓடத்துறை' என்ற கிராமத்தில் உறவினர் வீட்டில் படுத்தபடுக்கையில் இருந்து வருகிறார்.
இதனால் அவரது கணவர் கருப்பையா சித்ராவிற்கு உதவியாக இருந்துகொண்டுள்ளார்.
இவருக்கு அவ்வப்போது ஓடத்துறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வறுமையிலும் கொள்கை:
இந்த காந்தியவாதி தம்பதியனருக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள், அரசு வேலை, நிலம் போன்ற பலவும் அளிக்க முன்வந்த போதிலும்; காந்தியக் கொள்கையை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு சலுகைகளை மறுத்துள்ளனர்.
ஆனால், காலம் செய்த கோலத்தால், தற்போது படுக்கையில் உள்ள சித்ராவிற்கு அரசு சார்பில் மருத்துவ உதவியும், பேட்டரியால் இயங்கும் இருசக்கர வாகனமும் வேண்டும் என அரசிடம் உதவிகேட்டு(Need Help) காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: Simbu-வுக்கு இப்படியும் ஒரு ரசிகனா.. சிம்பு ரசிகர் கூல் சுரேஷ் செய்த அட்ராசிட்டிகள்!