இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27ஆம் தேதி முதல் காணொலிக் காட்சி மூலம் நடைபெறுமென்றும், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் வேளாண்மை இயக்குநர் அலுவலகங்களில் இருந்துகொண்டு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைக்கலாமென்றும், விவசாயிக்ள் தங்களது கோரிக்கை மனுக்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் வழங்கலாம்.
ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாள்களில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட விவசாய குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு வேளாண்மைத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் துறை சார்ந்த பதில்களைத் தெரிவிப்பார்கள்.
இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 8 மாதமாக விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் வருகிற 27ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்திலுள்ள் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் ஈரோடு வேளாண்மை இயக்குநர் அலுவலகங்களில் இருந்துகொண்டு காணொலி மூலம் நடைபெறும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அந்தந்த வட்டாரத்திலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கிடவும், விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் நடைபெறும் இந்தக் காணொலிக் காட்சி கூட்டத்தை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் செய்திக் குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.