கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் நோய்த் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்ததால், விருப்பமுள்ள வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில், முதல் கட்டமாக நேற்று முன்தினம் (மே 19) 30 வெளி மாநில தொழிலாளர்கள் பேருந்து மூலம் சேலம் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து ரயில் மூலம் ராஜஸ்தான் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், வெளி மாநில தொழிலாளர்கள் ஆயிரத்து 464 பேரை ஒரே ரயிலில் அழைத்துச் செல்லும் வகையில், ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, உத்தரப் பிரதேசத்திற்கு செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, வெளி மாநிலத்திற்கு செல்பவர்கள் மாலை 4 மணி முதல் ரயில் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு தண்ணீர், உணவு உள்ளிட்டவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன.
அதன்பின், ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஆயிரத்து 464 வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.