ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், "இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் பல உயிர்களை பலி கொடுத்து இலவச விவசாய மின் பயனை பெற்றுவருகிறோம். மத்திய அரசு 'ஒரே நாடு ஒரே மின் கட்டணம்' என்ற திட்டத்தைக் கொண்டுவர பரிசீலனை செய்துவருகிறது. அதை அமல்படுத்தினால் தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் ரத்தாகிவிடும் என்ற அச்சம் விவசாயிகளிடம் நிலவிவருகிறது.
மின் துறையை தனியார்மயமாக்குவது, 'ஒரே நாடு. ஒரே மின் கட்டணம்' என எந்த ரூபத்திலாவது இலவச மின்சாரத்தை ரத்துசெய்ய முயற்சி செய்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம்.
விவசாய மின் கட்டணம் ரத்து செய்யப்பட்டால் விலைவாசி உயர்வை மக்கள் சந்திக்கவேண்டி வரும். அதனால் விவசாயத்துக்கு மின் கட்டணம் என்ற முறையைக் கொண்டுவரக்கூடாது என்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே தமிழ்நாடு முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், தமிழ்நாட்டில் சுமார் 22 லட்சம் வேளாண் பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் பெற்றுத்தந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அய்யாவின் 96ஆவது பிறந்தநாள் விழாவை கோபிசெட்டிபாளைத்தில் வரும் 6ஆம் தேதி மாநாடாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க : மக்களவையில் முழங்கிய ஆ.ராசா... சில நிமிடங்களில் பொதுத்தேர்வு ரத்தான மாயம்!