கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பிரகாஷ், மகேஷ். இவர்கள் இருவரும் இணைந்து கோவையில் ஸ்ரீ சாரு பார்ம்ஸ் என்ற பெயரில் நாட்டுக்கோழி வளர்ப்பு நிறுவனத்தைத் தொடங்கி இரு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் செலுத்தினால் 350 நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கி மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் பராமரிப்புத் தொகை - ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, மூன்று ஆண்டுகள் முடியும்போது முதலீடு செய்த பணம் திருப்பி அளிக்கப்படும் என்பது உள்பட இரு திட்டங்களை அறிவித்தனர்.
நீதிமன்றத்தில் புகார்
இதை நம்பி இந்நிறுவனத்தில் பலர் முதலீடு செய்தனர். ஆனால் உறுதி அளித்தபடி அந்நிறுவனம் பணம் திருப்பித் தரவில்லை. இந்நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட காரமடையைச் சேர்ந்த ராஜன் என்பவர் இது குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவில் 2012ஆம் ஆண்டு புகார் செய்தார்.
அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்நிறுவனம் 14 முதலீட்டாளர்களிடம் 40 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு கோவை முதலீட்டாளர் நலம் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
10 ஆண்டு சிறை
இதில் மோசடியில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் மகேஷ் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான பிரகாஷுக்கு கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சேற்றில் சிக்கி உயிரிழந்த யானைக்கன்று - பாசப்போராட்டம் நடத்திய தாய் யானை