ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அபெக்ஸ் என்கிற நிறுவனமொன்று பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகக் கூறி, நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.
அப்புகார் மனுவில், உலக அளவில் புதிதாக ஆன்லைன் செய்தி நிறுவனமொன்றை தொடங்கவுள்ளதாகவும், நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், இதற்காக தமிழ்நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்டவர்களிடம் 100 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளதாகவும், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் பல கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றிருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனர்.
மோசடி செய்த நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.
புகாரைப் பெற்றுக் கொண்ட ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தினர், புகார் மனுக்களை மாநிலத்தலைமைக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.