ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் நாட்டின் மிக முக்கியமான வனப் பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள புலிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றன. அது மட்டுமல்லாமல், வனத்துறையினர் ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்தியமங்கலத்தை அடுத்த அரசூர் என்ற கிராமத்தில் சிலர் தற்காலிகமாக கூரை அமைத்து தங்கி வந்துள்ளனர்.
அதேநேரம் இவர்களின் தினசரி நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பும்படி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்காணித்து வந்த கிராம மக்கள், இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் மாறுவேடத்தில் சென்ற வனத் துறையினர், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தங்கும் இடத்தை சோதனை செய்துள்ளனர்.
அப்போது ஒரு சாக்குப் பையில் புலித்தோல், புலி நகம் மற்றும் எலும்புகள் ஆகியவை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தற்காலிக தங்கும் இடத்தில் இருந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரத்னா (40), மங்கல் (28), கிருஷ்ணன் (59) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சந்தர் (50) ஆகிய 4 பேரையும் வனத் துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் இருந்து புலித்தோல், புலி நகம் மற்றும் எலும்புகள் ஆகியவற்றையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இவர்கள் புலித்தோலை கடத்தி வந்தது எப்படி, எதற்காக தமிழ்நாட்டில் தங்கினர், இதல் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கிராமத்திற்குள் நுழைந்து கால்நடையை வேட்டையாடும் புலி; தீவிர கண்காணிப்பில் தமிழக - கர்நாடக வனத்துறை