ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள அரசூர் குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர், லோகநாதன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. மகேஸ்வரி கடந்த 5 ஆண்டுகளாக கோணமூலையில் உள்ள தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தில் உதவி ஆய்வாளராகவும், கணக்காளராகவும் பணியாற்றி வந்தார்.
கடந்த 23ஆம் தேதி சத்தியமங்கலம் கொடிவேரி சாலையில் சின்னட்டிபாளையம் என்ற இடத்தில் லோகநாதன் நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி சாலையோர மைல் கல்லில் மோதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லோகநாதனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, லோகநாதனின் பெற்றோர் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் லோகநாதனின் மனைவி மகேஸ்வரி தனது திருமணத்தை மீறிய உறவில் இருந்தவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்து சடலத்தை வீசிச்சென்றது தெரியவந்தது.
சம்பவம் நடந்தன்று (மே 23) மகேஸ்வரி, வேலைக்குச்செல்லும் போது, கணவரை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். நிறுவனத்திற்குள் சென்றதும், மகேஸ்வரியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கவுரிசங்கர், கிரில் ஒர்க்ஷாப் வேலை செய்து வந்த விக்னேஷ்வரன், விஜய் ஆகியோர் மறைந்திருந்த லோகநாதனை கான்கிரீட் கல்லால் தாக்கியுள்ளார். இதில் அங்கேயே சுருண்டு விழுந்து லோகநாதன் உயிரிழந்தார்.
உடனடியாக, லோகநாதனின் சடலத்தையும், லோகநாதன் சென்ற இருசக்கர வாகனத்தையும் வாட்டர் கம்பெனி வேனில் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் வழியாக கொடிவேரி சாலையில் சென்றுள்ளனர். சின்னட்டிபாளையம் என்ற இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வேனை நிறுத்திய கவுரிசங்கர், உடனடியாக லோகநாதனின் சடலத்தையும், இருசக்கர வாகனத்தை அங்கிருந்த மைல் கல் அருகே போட்டு விபத்து போல சித்தரித்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து லோகநாதனை கொலை செய்த அவரது மனைவி மகேஸ்வரி, கவுரிசங்கர், கவுரிசங்கரின் தம்பி விஜய், மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மீனவப்பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை.. ஒடிசாவைச் சேர்ந்த 2 பேர் கைது...