ஈரோடு மாவட்டம், அறச்சலூர் உதயபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி தர்மன் (70). இவர் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி தனது தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்போது தண்ணீருடன் வந்த குப்பைகளை வெளியே எடுத்து அகற்றினார். இதில் அருகில் உள்ள விவசாயத் தோட்டத்தில் குப்பை விழுந்துள்ளது. அந்த நிலத்தின் உரிமையாளர்களான அறச்சலூர், வடுகபட்டி, காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி மற்றும் அவரது தம்பிகளான சந்தானம், லட்சுமி பெருமாள், உறவினராக சக்திவேல் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.
குப்பைகளை எதற்காக தனது தோட்டத்தில் கொட்டியதாகக் கேட்டு அவர்கள் நான்கு பேரும், தர்மனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவர்களுக்கிடையே தகராறு முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சந்தானம் தனது கையில் வைத்திருந்த மண்வெட்டியை திருப்பி வைத்து, தர்மனைத் தாக்கினார்.
மேலும், லட்சுமி பெருமாளும், ராமசாமியும் மண்வெட்டியின் பிடியால் தர்மனின் நெஞ்சுப்பகுதியில் அடித்துள்ளனர். சக்திவேல் அங்கிருந்த கட்டையை எடுத்து தர்மனைத் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த தர்மனை அக்கம் பக்கத்தினர் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த தர்மன் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி இறந்தார்.
இதுகுறித்து அறச்சலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தர்மனை கொலை செய்த சந்தானம், ராமசாமி, லட்சுமி பெருமாள், சக்திவேல் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது ஈரோடு நீதிமன்றத்தில் காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, தர்மனைக் கூட்டாக சேர்ந்து கொலை செய்த குற்றத்துக்காக சந்தானம், ராமசாமி, லட்சுமி பெருமாள், சக்திவேல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் காவல் துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் துரைசக்திவேல் ஆஜரானார்.
இதையும் படிங்க: பெரியகுளம் அருகே இரு சமூகத்தினர் மோதல் - 7 பேருக்கு வெட்டு, இருவர் பலி!