ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சத்தியமங்கலம், பெரியகுளம், சிக்கரசம்பாளையம், புளியங் கோம்பை, அரியப்பம்பாளையம், எரங்காட்டூர் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பூ பயிரிடப்பட்டுள்ளது.
மாலைகளுக்கும், திருமண மணவறை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் சம்பங்கி பூவிற்கு அதிக கிராக்கி இருப்பதால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் சத்தியமங்கலத்தில் இருந்து இவை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட திடீர் ஊரடங்கால் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடத்த கட்டுப்பாடு, கோயில்களில் வழிபாடு நடத்த தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பூக்களின் பயன்பாடு குறைந்ததோடு, அவற்றின் விலையை கேட்க ஆளில்லா நிலை ஏற்பட்டது.
மேலும் பயிரிடப்பட்டுள்ள சம்பங்கி பூ கடந்த ஒருவாரமாக செடிகளிலிருந்து பறிக்கப்படாமல் இருப்பதினால் அவை பூத்துக் குலுங்குகின்றன. இதனால் சம்பங்கி பூவை பயிரிட்டுள்ள விவசாயிகள், பூக்களை பறிக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் வருமானம் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது கரோனா பாதிப்பால் பூக்கள் விற்பனை ஆகாவில்லை. செடிகளில் இருந்தும் பூக்கள் பறிக்கப்படாமல் உள்ளதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனை அப்படியே விட்டுவிட்டதால் செடியில் ஒரு விதமான நோய் தாக்குதல் ஏற்பட்டது. இதனால் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 15 டன் சம்பங்கி பூக்கள் வீணாவதாக வேதனையாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் 100 தெருக்களில் கரோனா தொற்று பரவியதால் மக்கள் அச்சம்!