ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்ததால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. மாயாற்றில் தண்ணீர் வெள்ளம்போல் கரைபுரண்டோடிய நிலையில் ஆபத்தை உணராத தெங்குமரஹாடா மக்கள் பரிசலில் ஆற்றைக் கடந்து பவானிசாகர் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் பரிசலில் ஆற்றைக் கடக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்தனர். மேலும், இரண்டு தினங்களாக தெங்குமரஹாடாவில் பரிசல் பயணம் தடைபட்டது.
பவானிசாகரிலிருந்து பேருந்தில் பயணித்த மக்கள் இரு தினங்களாக வனத் துறை காட்சி கோபுரம் வளாகத்தில் தங்கவைக்கப்பட்டனர். தற்போது, மாயாற்றில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பிவருவதால், மக்கள் தற்போது பரிசலில் மீண்டும் மாயாற்றை கடந்து ஊருக்குள் சென்றுகொண்டிருக்கின்றனர்.
இருப்பினும் மாயாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது கணிக்கமுடியாத சூழல் என்பதால் பரிசலை கவனமாக இயக்குமாறு வனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.