ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரம், சிக்கள்ளி, இக்கலூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால். வனப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் பள்ளங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழைநீர் சிக்கள்ளியில் இருந்து தாளவாடி வழியாக செல்லும் காட்டாற்றில் கரை புரண்டு ஓடுகிறது. தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள கர்நாடக மாநில நீர்த்தேக்கமான சிக்கோலா அணைக்கு சென்று சேருகிறது. தாளவாடி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வனப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் பள்ளங்களில் மழை நீர் ஓடுவதால் வனவிலங்குகளின் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது.