நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அதன் முழுகொள்ளளவை எட்டியது. இதனால் பில்லூர் அணையின் உபரிநீருடன், வேறு சில பகுதிகளிலிருந்து வரும் மழை நீரும் சேர்ந்து மேட்டுப்பாளையம் பவானி ஆறு வழியாக பவானிசாகர் அணைக்கு வந்தது. இதனிடையே மாயாற்று நீரும் பவானிசாகர் அணைக்கு வருவதால் தற்போது வினாடிக்கு எட்டாயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு உயரம் 105 அடியாகும். நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், அணையின் தற்போதைய நீர்மட்டம் 104.2 அடியை எட்டியுள்ளது. இன்று பிற்பகலில் 104.5 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், அணைக்கு வரும் உபரிநீர், அணையின் மேல்மதகில் உள்ள 9 மிகைநீர் போக்கி வழியாக பவானிஆற்றில் திறந்துவிட்டப்பட உள்ளது. பவானிஆற்றில் உபரிநீர் திறந்துவிடும்போது தாழ்வான பகுதியில் குடியிருப்போர் வெள்ளநீரால் பாதிக்கப்படுவர் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சத்தியங்கலம் நகராட்சி சார்பாக, ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் வருவாய், உள்ளாட்சி, நகராட்சி துறைக்கு அவ்வவ்போது தகவல் தெரிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பவானி ஆற்றின் கரையோரம் உள்ள எஸ்.டி. பணிமனை சந்து, முனியப்பன் கோவில் வீதி, மத்திமரத்துறை, பிள்ளையார் வீதி, ஐயப்பன் கோவில் வீதி, சின்னவீதி ஆகிய பகுதியில் ஒலி பெருக்கி, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளநீரால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கு திருமண மண்டபங்கள், பள்ளிகள், சிறப்பு முகாம்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு துறை, மருத்துவத்துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு!