ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம், பவானிசாகர், கொத்தமங்கலம் ஆகிய கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் குடியிருப்போர் பாதுகாப்பு கருதி மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் முனியப்பன் கோயில் வீதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட இடங்களில் வட்டாட்சியர் கணேசன், நகராட்சி ஆணையர் ஆகியோர் பொதுமக்களிடம் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.
மேலும் பவானிசாகர் அணையிலிருந்து எந்த நேரமும் தண்ணீர் திறந்துவிடப்படும் என்பதால் பொதுமக்கள் பவானி ஆற்றில் துணி துவைப்பதையும் குளிப்பதையும் தவிர்க்க வேண்டுமென வருவாய்த் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் பலத்த காற்றுடன் கூடிய மழை - சாய்ந்த பேருந்து நிலையத்தின் பெயர்ப் பலகை