ஈரோடு மாவட்டம் ரகுபதிநாயக்கன்பாளையம், ரெயின்போ காலனியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்துகொண்டே நிதி நிறுவனமும் நடத்திவருகிறார். ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் சாய் நிதி நிறுவனம் நடத்திவரும் வீரமணி என்பவர் 25 லட்ச ரூபாய் தமிழ்ச்செல்வனிடம் கடனாக வாங்கியுள்ளார். கடன் வாங்கியது தொடர்பாக இருவருக்கும் சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் ஜூன் 6ஆம் தேதி வீரமணி தனது அலுவலகத்திற்கு வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு தமிழ்ச்செல்வனை அழைத்துள்ளார். பணத்தை வாங்க தமிழ்ச்செல்வன் சென்றுள்ளார். அப்போது வீரமணி, அவரது நண்பர்கள் சேர்ந்து தமிழ்ச்செல்வனை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். மேலும், தமிழ்ச்செல்வனை காரில் கடத்திச்சென்று சரமாரியாக தாக்கியுள்ளனார்.
அவர்களிடமிருந்து, தப்பித்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு தமிழ்ச்செல்வன் சேர்ந்தார். இது குறித்து ஈரோடு சூரம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கொண்டனர். இந்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த விவேக், கார்த்தி, சிவபிரசாத் ஆகிய மூன்று பேரையும் 8ஆம் தேதி கைது செய்தனர். இவ்வழக்கில், தலைமறைவாக இருந்த பிரேம்குமார், நாகராஜ், சரவணன், கிரண், ஸ்ரீதர் ஆகிய ஐந்து பேரையும் நேற்று சூரம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். முக்கியக் குற்றவாளியான வீரமணி, செந்தில் ஆகியோரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.