ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பெரியகுளம் மலை அடிவாரத்தில் வசித்து வருபவர் முருகேசன். விவசாயியான இவர் தற்போது மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளார்.
சத்தியமங்கலம் அதிக வெப்பமான பகுதி என்பதால், பலரும் மரவள்ளிக் கிழங்கினை சாகுபடி செய்யத் தயங்கும்போது, முருகேசன் மரவள்ளிக்கிழங்கினை நடவு செய்தபோது, அப்பகுதி மக்கள் விநோதமாகப் பார்த்துள்ளனர்.
இவர் தனது வயலில் மரவள்ளிக் கிழங்கு நடவு செய்யும்போது, இரண்டு அடி இடைவெளிக்குப் பதிலாக மூன்று அடி இடைவெளிவிட்டார். தொடர்ந்து வாரம் ஒருமுறை சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சினார். இதனால் நடவு செய்த கிழங்கு வாடாமல் போதிய நீர் பெற்று வளர்ந்தது.
கரோனா ஊரடங்கின் காரணமாக, அனைத்துத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால் கிழங்கினை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், கிழங்கினை செடியிலேயே விட்டுள்ளார், முருகேசன். பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, மரவள்ளிக் கிழங்குகளை தொழிற்சாலைகளுக்கு அனுப்புவதற்காக பிடுங்கும் பணி நடைபெற்றது. அதில் ஒரே செடியில் 5 அடி நீளமுள்ள 8 மரவள்ளிக்கிழங்குகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மரவள்ளிக்கிழங்கினை வாட்ஸ்அப் மூலம் விற்பனை செய்ய எண்ணிய முருகேசன், ஆளுயர மரவள்ளிக்கிழங்கின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இதனைக்கண்ட வியாபாரி ஒருவர், நான்காயிரம் ரூபாய்க்கு வழக்கமாக விற்பனை ஆகும் ஒரு டன் கிழங்கினை ஏழாயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இதுகுறித்துப் பேசிய முருகேசன் சொட்டு நீர்ப் பாசனம் மூலம், கிழங்கு சாகுபடி செய்ததே இதற்கு காரணம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மரவள்ளிக் கிழங்குக்கு நிலையான விலை வேண்டும்' - விவசாயிகள் கோரிக்கை