பவானிசாகர் காராட்சிக்கொரை வனக் கால்நடை மருத்துவமனையில், மலைபாம்புகளுக்கு உள் அறுவை சிகிச்சை மூலம் ரேடியோ மின்னலை கடத்தி கருவியைப் பொருத்தி, அதன் இயல்புகளைக் கண்டறிய முதல்முறையாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட வனக் கால்நடை மருத்துவர் அசோகனுக்கு, இந்திய வனவிலங்குகள் ஆராய்ச்சி மையம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மலைப்பாம்புகள் குறித்த ஆராய்ச்சி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. வெளிநாடுகளில் இந்த ஆராய்ச்சி செய்துவந்த நிலையில், இந்திய வன விலங்கு ஆராய்ச்சி மையம் மூலம் தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், 10 மலைப்பாம்புகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாம்புகளின் உடலில் தட்பவெப்பம், சுற்றுப்புறச் சூழல், இனப்பெருக்கம் உடல் இயப்பு குறித்துக் கண்டறிய இந்தியாவில் முதன்முறையாக மலைப்பாம்புகளின் வயிற்றுப்பகுதியில் 18 கிராம் எடையுள்ள ரேடியோ மின்னலை கடத்தி கருவியைப் பொருத்தி, உள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
10 பாம்புகளில் 3 பெண் மற்றும் 7 ஆண் பாம்புகளுக்குப் பொருத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த ஆராய்ச்சி இன்னும் இரண்டு ஆண்டுக்குள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்ட10 பாம்புகளில், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், வனப்பகுதிக்குள் விடப்பட்டன. அவை சென்ற பாதையில் உணர்திறன் கம்பிகள் (ஆண்டெனா) மூலம் கிடைக்கும் ரேடியோ அலையை வைத்து பாம்பின் நடமாட்டமும், அதன் இயல்புகளும் கண்டறியப்பட்டன.