ஈரோடு மாவட்டம், கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவருக்கு சொந்தமான முறுக்கு, சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்களைத் தயாரிக்கும் நிறுவனம் அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஆக. 18) மாலை, ஊழியர்கள் வேலை முடித்து சென்ற நிலையில் தின்பண்டங்கள் தயாரிக்கும் இடத்திலிருந்து திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவலளித்தனர். அத்தகவலின் பேரில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தின்பண்டங்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.