ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குள்பட்ட ஐய்யப்பாநகரிலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவராகப் பணியாற்றும் அருண்பிரகாஸ் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இன்று காலை அருண்பிரகாஸ் சத்தியமங்கலத்திற்கு வேலைக்குச் சென்ற நிலையில், அவரது தாயாரும் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். வீட்டில் அருண்பிரகாஸின் தம்பி கோகுல் மட்டும் தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது மற்றொரு படுக்கை அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு அறை பற்றி எரியத் தொடங்கியுள்ளது. புகை வெளியேறுவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் சமையறையிலிருந்த எரிவாயு உருளையை அப்புறப்படுத்திவிட்டு தீயைக் கட்டுப்படுத்தி பக்கத்து வீடுகளில் பரவாமல் அணைத்தனர்.
இவ்விபத்தில் வீட்டிலிருந்த கட்டில், பீரோ, துணிகள், சொத்து ஆவணங்கள் என சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்து ஏற்பட்டதும் கோகுல் வீட்டைவிட்டு வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கட்டடத் தொழிலாளி!