கரோனா வைரஸை கட்டுப்படுத்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இந்த மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இம்மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையான இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மாவட்டத்திலுள்ள 135க்கும் மேற்பட்ட எல்லைப் பகுதிகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியான ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சோதனைச் சாவடியில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு, தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேறி மாவட்ட எல்லையைக் கடப்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் நகரின் முக்கியச் சந்திப்புகள், முக்கியப் பிரதான சாலைப் பகுதியில் தற்காலிகமாக இரும்புத் தடுப்புகளை அமைத்து யாரும் சாலையைக் கடக்க முடியாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகரப் பகுதிகளிலும் முறையான காரணங்களின்றியும், அத்தியாவசியத் தேவையின்றி வெளியேறியவர்கள் மீது காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.