தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்குள்பட்ட மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டுப்புழுவியல் துறை செயல்பட்டுவருகிறது. இந்தத் துறையில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகள் செயல்பட்டுவருகின்றன. இதில், இளங்கலை பட்டுப்புழுவியல் துறையைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவிகள் தங்களுடைய கல்விமுறையின் ஒரு பகுதியாக மூன்று மாத காலங்கள் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் கிராமத்தில் 'கிராம தங்கல்' திட்டத்தின் மூலம் தங்கி தங்களது களப்பணியை ஆற்றிவருகின்றனர்.
இதன்மூலம் மாணவிகள் பட்டுப்புழு விவசாயிகளிடம் கலந்துரையாடி, தொழில்நுட்பங்களைக் கையாளும் முறையை கற்றுக்கொண்டு வருகின்றனர். இதில் சங்கவி, விஜயகுமார் ஆகியோர்களின் மேற்பார்வையின் கீழ் மாணவிகளும் இக்களப்பணியின் ஒருங்கிணைப்பாளர்களாக முனைவர் ஜோதிமணி, முனைவர் தங்கமலர் ஆகியோரும் செயல்பட்டுவருகின்றனர்.
இதில்,கடந்த 15 நாட்களில் 20 பட்டுப்புழுவில் விவசாயிகளை சந்தித்து அவர்களுடைய அனுபவங்களையும் சில மேன்மையான தொழில்நுட்பங்களையும் தெரிந்துகொண்டனர்.
மேலும், இப்பகுதியிலுள்ள முன்னோடி விவசாயி ஒருவர் மல்பெரி செடியிலுள்ள வேர் அலுகல் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வேலி மசால் தீவனப்பயிரை ஊடுபயிராக வளர்த்துவருகிறார்.
இதன்மூலம் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் முறையை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும், இப்பகுதியில் அனைத்து விவசாயிகளும் பட்டுப்புழு வளர்ப்பில் வரும் கழிவுகளை பயன்படுத்தி உயிரி எரிபொருள் தயாரிப்பதன் மூலம் தங்களுடைய வீட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றனர்.
இத்தொழில்நுட்பத்தையும் விவசாயிகளிடமிருந்து மாணவிகள் நேரடியாக கற்றுக்கொண்டனர். இக்களப்பணியின் ஒரு பகுதியாக மாணவிகள் ஒசூரில் உள்ள தமிழ்நாடு பட்டுப்புழு பயிற்சி நிலையத்திற்கு சென்று மூன்று நாட்கள் பயிற்சி பெற்று அத்தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் எடுத்துரைத்தனர். இந்தக் களப்பணிகளும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் டிசம்பர் 3ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க : நீட் பயிற்சி என கூறி மாணவர்களிடம் கைவரிசை காட்டிய கோவை ஆக்ஸண்ட் அகாடமி!