ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் யானைகள், காட்டுப்பன்றிகள் ஆகியவை விவசாய நிலங்களில் புகுந்து மக்காச்சோளம், ராகி, கரும்பு, முட்டைகோஸ் போன்ற பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.
இதனால் வனவிலங்குகள் புகாதபடி விவசாயிகள் தோட்டத்தைச் சுற்றிலும் பேட்டரியால் இயங்கும் மின்வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர். இந்நிலையில், இக்கலூரைச் சேர்ந்த மாதேவசாமி என்பவர் தோட்டத்தில் யானைகள் புகுந்து, மக்காசோளப் பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது.
இதனால் தோட்டத்தில் சுற்றிலும் போடப்பட்டிருந்த மின்வேலியில் உயர் அழுத்த மின்சாரத்தை பாய்ச்சியிருந்ததால், இன்று (நவ.26) அதிகாலை மக்காச்சோளப் பயிரை திண்பதற்கு வந்த பெண் யானை, இந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது. பின்னர், இது குறித்து அக்கிராம மக்கள் வனத்துறையிருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இறந்த பெண் யானையின் உடலைக் கைப்பற்றிய வனத்துறையினர், மாதேவசாமியிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், பக்கத்து தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்சாரத்தை சட்ட விரோதமாக எடுத்து மின்வேலியில் பாய்ச்சியதால், அதில் சிக்கி யானை உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், இது தொடர்பாக சம்பவயிடத்தைச் சுற்றியுள்ள 3 விவசாயிகளிடமும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாதபடி பேட்டரியால் இயங்கக் கூடிய மின்வேலிக்கு மட்டுமே வனத்துறை அனுமதியளித்துள்ள நிலையில், மாதேவசாமி என்பவர் தோட்டத்தில் உயரழுத்த மின்சாரம் செலுத்தியதாலே யானையின் உயிரிழப்புக்கு காரணம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-க்கு நாளை சிலை திறப்பு!