ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குள்பட்ட புதுசாமி கோயில் வீதி, பாரதி வீதி, வெங்கட்ராமன் வீதி ஆகிய மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் முன்பு செயல்பட்டுவந்த பாலவித்தியாலயா பள்ளியில் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் சேமித்துவருகிறது.
இதனால், பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குப்பை நிரம்பியதால் அதன் பக்கவாட்டில் குப்பைகளை நகராட்சிப் பணியாளர்கள் கொட்டிவருகின்றனர்.
தினந்தோறும் சுமார் இரண்டு டன் குப்பை கொட்டப்படுகிறது. குப்பை காரணமாக துர்நாற்றம் வீசுவதுடன் குப்பைகளிலிருந்து பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோயால் அவதிப்படுவதாகவும் இப்பகுதி குடியிருப்போர் தெரிவித்தனர்.
முன்னதாக குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்தில் ஆழ்துளை கிணறு ஒன்றும் அமைந்துள்ளது. அதிலிருந்துதான் இப்பகுதி முழுவதிற்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவந்தாகவும் ஆனால் தற்போது குப்பைகளை கொட்டி ஆழ்துளை கிணற்றையும் மூடியுள்ளதாகவும் இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதனால் புதுசாமிகோயில் வீதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக நகராட்சி நிர்வாகம் அகற்றி பாலவித்தியாலயா பள்ளியை தூய்மைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இது குறித்து நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தியிடம் கேட்டபோது, தனியார் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குப்பைகளைப் பிரிந்து உரமாக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் விரைவில் அக்குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.