ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், சத்தியமங்கலம், புளியம்பட்டி பவானிசாகர், நால்ரோடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆர்சிஹெச் ரக பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர் .
கடந்த வாரம் 65 ரூபாய்க்கு ஏலத்தில் போன ஒரு கிலோ பருத்தி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் 40 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை மட்டுமே ஏலம் விடப்பட்டதால் ஆத்திரமடைந்தனர். இதனைடுத்து சத்தியமங்கலம் கோபி சாலையில் மறியல் போராட்டம் செய்தனர்.
வறட்சியான இந்த காலத்தில் பருத்திக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பருத்தி ஏலம் எடுப்பவர் ஓய்வுபெற்ற ஊழியரைக் கொண்டு ஏலம் விடுவதால், இது போன்ற முறைகேடு நடைபெறுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால், நேற்று நடைபெறவிருந்த பருத்தி ஏலம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, இன்று நடைபெறும் என கூட்டுறவு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களைக் கொண்டு ஏலம் விட வேண்டும் என்றும், வியாபாரியிடம் கூட்டணி போட்டு விலை குறைப்பை தடுக்க வேண்டும் என்றும் கூட்டுறவு சங்கத் தலைவர் மோகன்ராஜிடம் விவசாயிகள் முறையிட்டனர். இதனால் விவசாயிகளுக்கும் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.