தமிழ்நாட்டில் ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், கரூர் ஆகிய 10 மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் விவசாயிகள் போராட்டத்தையும் மீறி விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு மூலகாரணமான, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தந்தி கம்பங்களை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட 1885ஆம் ஆண்டு தந்தி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காவல்துறையின் தடையை மீறி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஈரோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று அங்கு தந்தி சட்டத்தின் நகலை சாலையில் போட்டு எரித்து தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பேரணியாக சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.