ஈரோடு மாவட்டம், மூலக்கடை ஆலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (60). விவசாயியான இவர், தனது தோட்டத்துக் கிணற்றின் படிக்கட்டில் அமர்ந்திருந்தபடி செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கையிலிருந்த செல்போன் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் விழுந்தது. நூறு அடி ஆழமுள்ள கிணற்றில் 60 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால், அவரால் உடனே செல்போனை எடுக்க முடியவில்லை.
இருப்பினும், செல்போனை அப்படியே விட்டு விடவும் மனமில்லாமல் கிணற்றிலிருந்த சுமார் 60 அடி தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்ற தொடங்கினார். காலையில் தொடங்கிய தண்ணீர் வெளியேற்றும் பணி மாலையில் நிறைவு பெற்றதும், கயிறு கட்டி இறங்கி செல்போனை எடுக்க முயற்சித்தார்.
கிணற்றுக்குள் இறங்க ரங்கசாமி பயன்படுத்திய கயிறு எதிர்பாராதவிதமாக அறுந்ததில் உள்ளே விழுந்தார். தண்ணீர் இல்லாததால் சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடியுள்ளார். மாலை வரை ரங்கசாமி வீடு திரும்பாததால், அவரை தேடி உறவினர்கள் வயலுக்கு வந்தனர். அப்போது அவர் சேற்றில் சிக்கியிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு தீயணைப்புத்துறையினருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேர முயற்சிக்குப் பின்னர், மயக்க நிலையில் இருந்த ரங்கசாமியை உயிருடன் மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பட்டுப்போகும் பட்டுப்புழு வளர்ப்பு - வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்...