ஈரோடு: கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ராஜசேகர். இவர், தனது மனைவி ஸ்ரீ வள்ளி, மகள் ஸ்ரீநிதி ஆகியோருடன் இன்று கோவையில் இருந்து காரில் சத்தியமங்கலம் அடுத்த கே.என். பாளையம் சென்றார். அங்குள்ள சித்த வைத்தியரை பார்த்துவிட்டு அவர்கள் மீண்டும் காரில் சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். சத்தியமங்கலம் அத்தாணி சாலை அரசு மருத்துவமனை அருகே கார் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி, அங்குள்ள பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.
அப்போது காரில் இருந்த பாதுகாப்பு ஏர் பலூன் உடைந்து வெளியேறியதால் காரில் இருந்த ராஜசேகர் உள்ளிட்ட 3 பேர் லேசான காயத்துடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் மின்கம்பத்தின் மீது மோதியதால் மின்கம்பம் உடைந்து, அதன் மின்வயர்கள் தொங்கி கொண்டிருந்தன. தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்இணைப்பை துண்டித்து, மின்வயரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் மீட்டனர். இதனால் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "கூடா நட்பு கேடாய் முடியும்": நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது ஏற்பட்ட விபரீதம்!