ஈரோடு சம்பத்நகரில் தனியாருக்குச் சொந்தமான கிட்னிகேர் சென்டர் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தொடர்புகொண்டு தாங்கள் கிட்னியை தானம் செய்ய விரும்புவதாகவும், அதற்காக மூன்று கோடி ரூபாய் எப்போது கிடைக்கும் என்றும் கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் பின் விசாரித்தபோது, வாட்ஸ்அப் மூலம் இது போன்ற தகவல் பரப்பபட்டதும், கிட்னி தானம் செய்வதற்கு முன்பாக அதற்கான பதிவுக்கட்டணமாக ஏழாயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையும் செலுத்த வேண்டும் என்று தெரியவந்தது.
அதுமட்டுமல்லாது இந்த விளம்பரத்தை பார்த்த மக்கள் சிலர் பணம் செலுத்தியுள்ளதாகவும் தெரியவந்தது. மேலும் முகநூல் பக்கத்திலும் மருத்துவமனை பெயரில் பொய்யான பக்கம் தயார் செய்து ஏமாற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பிரபாகரன் இது குறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து சைபர் க்ரைம் காவல் துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.