ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதி மூக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தழகு (51). 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர் கோவை, ஈரோடு, பவானி, அந்தியூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கடந்த 26 ஆண்டுகளாக மருத்துவ உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார். இவர் தனது வீட்டிலேயே மூன்று ஆண்டுகளாக மருந்தகம் ஒன்றையும் நடத்திவந்துள்ளார்.
மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு முத்தழகு சிகிச்சையளிப்பதாக, கோபி வருவாய் கோட்டாட்சியர் பழநி தேவிக்கு புகார் சென்றது. இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 12ஆம் வகுப்புவரை மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்குச் சிகிச்சை அளித்துவருவது உறுதிசெய்யப்பட்டது.
பின்னர் இது குறித்து சுகாதாரத் துறையினர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் போலி பெண் மருத்துவர் முத்தழகை கைதுசெய்தனர். மேலும் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்திய மருத்துவ உபகரணங்களும் பறிமுதல்செய்யப்பட்டன.
இதையும் படிங்க : செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி உற்பத்தி: நீதிமன்றம் 'பளீச்'!