ஈரோடு: பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி தலைமையில், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பிரதிநிதிகள், வார்டுகள் உறுப்பினர்கள், வார்டு கிளைச் செயலாளர்கள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.
மேடையில் பேசுகையில், "ஒரு நாடு வளர வேண்டும் என சொன்னால், நாட்டில் உள்ள மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும் என சொன்னார்கள். இன்றைக்கு நாட்டில் உள்ள மக்கள் கண்ணீர் சிந்தாமல் வாழ வேண்டும் என சொன்னால், அதிமுகவால் மட்டும் தான் அதை உருவாக்க முடியும். வேறு எவராலும் உருவாக்க முடியாது என்ற வரலாற்றை நாம் படைத்து இருக்கின்றோம். இப்போதே பல பேர் பயந்துகொண்டு இருக்கிறார்கள்.. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து அச்சத்தோடு இருக்கிறார்கள்.
இனி என்ன நடக்கப்போகிறது என எனக்கு தெரியாது. ஆனால், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையில் உள்ள கூட்டணிதான் வெற்றி பெறும். அதை எவராலும் மாற்ற முடியாது என்ற வரலாற்றை நாம் படைப்போம். கூட்டணி சரியாக இருக்கிறது. மேலும் ஒற்றுமை உணர்வோடு இக்கூட்டணி இணைந்து பணியாற்றி வருகிறது.
எந்த கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வலுமையாக நின்று தமிழ்நாட்டிலே வென்று காட்டியதோ, எந்த கூட்டணி இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறதோ, அந்த கூட்டணி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40ஐயும் பிடிக்க வேண்டும். அதற்கான பணிகளை நாம் விரைந்து ஆற்ற வேண்டும். தொண்டர்களின் கடினமான உழைப்பால் மட்டும் தான், பவானிசாகர் தொகுதி அதிமுக கோட்டை என நிரூபித்துள்ளனர்.
இன்றைக்கு இயற்கையும் அவர்களுக்கு சாதமாக (திமுக) இல்லை. டெல்டா பகுதியில் இன்றைக்கு வறட்சி நிலவுகிறது. இந்த நிலைமை நமக்கு சாதமாக இருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் மக்களவைத் தேர்தல் புதிய திருப்புமுனையை உருவாக்கும்" என்றார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "இரு சட்டமன்றத் தொகுதிக்கு, ஒரு மாவட்ட செயலாளர் என்ற தகவல் வதந்தி. கட்சியில் இருந்து பிரிந்து போனவர்கள் மீண்டும் இணையலாம். பிரிந்து போனவர்களுக்கும் பதவிகள் வரலாம்" எனத் தெரிவித்தார்.