ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அரசு ஆரம்பப்பள்ளியில் ஆதரவற்ற கருணை இல்லக்குழந்தைகள் படித்து வருகின்றனர். ஆனால், இப்பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் கட்டடம் இருந்தது குறித்தும், அதனருகே விளையாடும் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்றும், விபத்து நிகழும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் "ஈ டிவி பாரத் தமிழ்நாடு" ஊடகம் முழுமையான செய்தி வெளியிட்டது.
இந்த செய்தியைப் பார்த்த தமிழ்நாடு கல்வித்துறையினர், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சென்னை கல்வித்துறை இயக்குநர் ஆகியோர், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தை அகற்றிவிட்டு, புதியதாக கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர்.
இதையடுத்து சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் வகாப், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) பெருமாள், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் விஜயராகவன் ஆகியோர் பள்ளிக் கட்டடத்தைப் பார்வையிட்டு, பழைய கட்டடத்தை இடித்து விட்டு, புதியதாக ரூ.15.65 லட்சம் செலவில் உடனடியாகத் திட்ட முன்மொழிவு, தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
"ஈடிவி பாரத் தமிழ்நாடு" ஊடக செய்தி எதிரொலியால், ஆதரவற்ற கருணை இல்ல குழந்தைகளுக்கு அரசின் கருணை கிடைத்துள்ளதால் குழந்தைகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: வைகையைப் பாதுகாக்கும் வகையில் உயர் நீதிமன்றம் உத்தரவு!