கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசன்குட்டை புதூரில் தனியார் நிறுவனத்தினர் முட்டை, கோழி இறைச்சிப் பண்ணை அமைக்க இடம் வாங்கி அதில் கோழிப்பண்ணை அமைக்க கட்டுமானப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள், கோழிப்பண்ணை அமைந்தால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் மாசுபட வாய்ப்புள்ளது எனக் கூறி கோழிப்பண்ணை அமைப்பதற்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தனர்.
ஆனால் அது குறித்து மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கோழிப்பண்ணை கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அரசன்குட்டை புதூர், சொக்குமாரிபாளையம் உள்ளிட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோழிப்பண்ணை கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடத்தில் இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த நம்பியூர் தாலுகா வட்டாட்சியர், சிறுவலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோழிப்பண்ணை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, ஊராட்சியின் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுவரும் கோழிப்பண்ணையின் பணியை நிறுத்தி வைக்குமாறு அறிவிக்கப்படுவதாகவும், தவறும் பட்சத்தில் ஊராட்சி விதிமுறைகளின்படி சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணை அமைக்கும் உரிமையாளருக்கு கடிதம் அனுப்பிய பிறகு அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.