ஈரோடு மாவட்டம் பன்னீர்செல்வம் பூங்காவில், தினசந்தை மற்றும் வாரச்சந்தை அடிப்படையில் 300-க்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் இயங்கிவருகின்றன. அப்துல் கனி சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜவுளிச் சந்தையில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஜவுளிச் சந்தைக்கு ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள், மொத்த உற்பத்தியாளர்கள் - வேட்டி, சேலை உள்ளிட்ட ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலால் சரிவர விற்பனை நடைபெறவில்லை என விற்பனையாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், இன்று கேரளா மற்றும் குஜராத் உள்பட வட மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனால் இந்த வாரமும் வெளிமாநில வியாபாரிகள் வரத்து குறைவாக காணப்படுவதால், வெறும் 15 விழுக்காடு மட்டுமே வியாபாரம் நடைபெற்றுள்ளதாக விற்பனையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
மேலும், வாரச்சந்தை, தின சந்தை ஆகியவற்றை ஒருங்கிணைத்து பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புதிய வளாகம் கட்டப்படவுள்ளது. இந்நிலையில், இரு சந்தைகளையும் ஒருங்கிணைத்து விற்பனை செய்யும் வகையில் ஜவுளி வியாபாரிகளுக்கு மாற்று இடத்தை மாநகராட்சி ஏற்படுத்தி தரவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.