ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஸ்ரீநிதி, நவநீதகிருஷ்ணன், ஆனந்தகிருஷ்ணன், சந்திரகுமார் ஆகியோர் மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
ரூ.40 ஆயிரம் செலவில் ஒரு ஆண்டு முயற்சியில் இச்சாதனையை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர். கையடக்க அளவிலிருக்கும் இந்த செயற்கைக்கோள் கடல் மட்டம், வெப்பம், காற்றழுத்தம் உள்ளிட்ட தகவல்களை ஆராய்ந்து கைப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பும் வைகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட அளவில் நடைபெற்ற கண்காட்சிகளில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட இந்த செயற்கைக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது மாணவர்களின் விருப்பமாக உள்ளது.
இதுகுறித்து மாணவர்கள், "நாங்கள் அப்துல்கலாமை முன்மாதிரியாகக் கொண்டு இதனை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தனர்". இதனிடையே ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனை நேரில் சந்தித்து தாங்கள் உருவாக்கிய செயற்கைக்கோளை காண்பித்து மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்.