ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்தவர் ஏ.ஆர். சிவ பிரியன். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார். இவரது பெற்றோர் பெண்கள் உடுத்தும் ஆடைகளில் வடிவமைக்கும் வேலை செய்துவருகின்றனர். சிறுவயது முதலே விண்வெளி மீது சிவ பிரியனுக்கு ஆர்வம் இருந்துள்ளது.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான விண்வெளி அறிவியல் குறித்த கட்டுரைப் போட்டி ஒன்றை நாசா விண்வெளி ஆய்வு அமைப்பு நடத்தியது. இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆனால் அதில் சிவ பிரியன் தேர்வுபெற்றார்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு அமைப்பின் உதவிபெறும் இன்டர்நேஷனல் ஆஸ்ட்ராய்ட்ஸ் சர்ச் கொலாபொரேஷன் அமைப்பு (international asteroids search collaboration) தொலைநோக்கி (telescope) மூலம் சிறுகோள்களின் புகைப்படங்களை அனுப்பியது. இதில் பூமியை தாக்கக்கூடிய சிறுகோள்கள் இயங்குகின்றனவா என்பது குறித்து கண்டுபிடிக்க பள்ளி மாணவர்களிடையே போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் சிவ பிரியன் அதற்கென வழங்கப்பட்ட மென்பொருள் மூலம் சிறுகோள்களைக் கண்டுபிடித்து அதனால் பூமிக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து சமர்ப்பித்தார்.
தற்போது இதனடிப்படையில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டியில் வெற்றிபெற்ற சிவ பிரியனை பாராட்டி நாசாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள இந்திய விண்வெளி அமைப்புகள் சான்றிதழ் வழங்கியுள்ளன. இதையடுத்து சிவ பிரியனுக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க... 'நினைவக இழப்பைத் தடுக்க புதிய வழி கண்டுபிடிப்பு' - ஐஐடி கவுகாத்தி