ஈரோடு: இந்த காலத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கை பயன்பாட்டிற்கு, வாகனங்களின் தேவை இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. பக்கத்து கடை வீதிக்குச் செல்வது முதல், பக்கத்து ஊருக்குச் செல்வது வரை வாகனங்கள் மக்களுடன் இணைந்து பயணித்து வருகிறது.
வாகனத்தில் செல்லும் மக்களின் நோக்கமானது, விபத்தில்லாமல் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே ஆகும். ஆனால், ஏதோ ஒருசில காரணங்களாலும், பல்வேறு நிகழ்வுகளாலும், விபத்துகள் நடக்கத்தான் செய்கிறது. இதுபோன்று நடக்கும் விபத்துகளில், பலர் படுகாயம் அடைகின்றனர். சிலர் உயிரிழந்து வருகின்றனர்.
![erode sathiyamangalam bike and car accident cctv footage bike and car accident cctv footage bike accident bike accident cctv footage cctv footage viral video accident news accident case erode news erode latest news ஈரோடு செய்திகள் சாலை விபத்து பைக் மீது மோதிய கார் ஈரோடு சத்தியமங்கலம் பைக் மீது மோதிய கார் வாகன விபத்து சிசிடிவி காட்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12790276_acc-1.jpg)
அதிகரிக்கும் விபத்துகள்
விபத்துகளில் படுகாயமடைபவர்கள், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இருப்பினும், விபத்துகள் நடப்பது இன்னும் குறையவில்லை. அதேபோல், விபத்துகள் நடப்பதைத் தடுக்க அரசும், போக்குவரத்து காவல் துறையினரும் பல நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு தான் உள்ளனர்.
தற்போது சாலை விபத்துகளில் உயிரிழப்பது அன்றாட நிகழ்வாக உள்ளது. மேலும் குடி போதையில் வாகனம் இயக்குதல், ஓய்வின்றி வாகனங்களை ஓட்டுதல், அதிக வேகமாக ஓட்டுதல், அலைபேசி பேசியவாறு ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் ஓட்டுதல், விதிமுறை மீறி செல்லுதல், ஓட்டுநர் உரிமம் இன்றி தகுதியற்றவர் வாகனம் இயக்குதல் போன்ற பல்வேறு காரணங்களாலேயே விபத்துகள் அதிகளவில் நடைபெறுகிறது.
அந்த வகையில் இன்று (ஆக 16) ஈரோடு சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அதாவது பவானிசாகர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர், குமார் (வயது 40). இவர் தொட்டம்பாளையம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டா மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார்.
தூக்கி வீசப்பட்ட புரோட்டா மாஸ்டர்
இந்நிலையில் இன்று (ஆக. 16) அவர் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமுக்கு செல்வதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் பவானிசாகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பவானிசாகரில் இருந்து பண்ணாரி நோக்கி சென்ற கார் தொட்டம்பாளையம் ரேடியோ ரூம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட குமாருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது இந்த வீடியோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த விபத்தில் சிக்கிய குமார் தலைக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பவானிசாகர் காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.