ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பட்டக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் கடந்த பல ஆண்டுகளாக தேவையின் பேரில் நூல் சேலைகளை தயாரித்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்துவருகிறார்.
இவர் ஈரோடு முனிசிபல் காலனிப் பகுதியைச் சேர்ந்த சேலை வியாபாரி பிரகாஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக சேலைகளை தயாரித்து விற்பனை செய்கிறார். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் பிரகாஷ் தனது செல்போன் மூலம் வேலுச்சாமியை அழைத்து பொங்கல் பண்டிகை வருவதால் விற்பனைக்காக வழக்கத்தைவிட கூடுதலாக 618 சேலைகள் உடனடியாக தேவைப்படுவதாகவும், சேலைகளை வழங்கிவிட்டு அதற்கான மொத்த தொகையான 5 லட்சம் ரூபாயை உடனே பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய வேலுச்சாமி கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராமல் சேலைகளை தயாரித்து நேற்று மொத்த சேலைகளையும் பிரகாஷ் கடை அமைந்துள்ள முனிசிபல் காலனிப் பகுதியில் சேர்த்துள்ளார். மொத்த சேலைகளுக்கான பணத்தைக் கேட்டபோது தனது மாமாவின் கடை சூரம்பட்டி வலசுப் பகுதியில் இருப்பதாகவும் அங்கு சென்றால் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியதன் பேரில் வேலுச்சாமி அங்கு சென்று காத்திருந்தார்.
நீண்ட நேரம் காத்திருந்தும் பணத்தை பெற முடியாத வேலுச்சாமி பிரகாஷை போனில் தொடர்பு கொண்டார் ஆனால் பிரகாஷ் போன் எடுக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேலுச்சாமி சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பிரகாஷ்,புருசோத்தமன், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சேகர் மற்றும் ஒப்பிலிராஜ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
மேலும் நூல் சேலைகளை கடந்த முயன்ற ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறைக்காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.