தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்ததாக ஈரோடு மாவட்டம் பெருமளவில் நோய்த் தொற்றுள்ள மாவட்டமாக கண்டறியப்பட்டு சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இங்கு, நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் அனைத்துமே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பராமரிக்கப்பட்டு வந்தன. அந்த மாவட்டம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் 33 ஆயிரத்து 330 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 66 ஆயிரத்து 308 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இவர்களது பகுதிகள் அனைத்தும் காவல் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு வீடுகள் முன்பாக கரோனா பாதிப்புள்ள வீடாகவும், வீட்டிலுள்ள உறுப்பினர்கள் விவரங்கள், வீட்டிலுள்ளவர்களின் கைகளில் முத்திரைகளும் பதிக்கப்பட்டன. இதனால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசித்த மக்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் நேரடியாக வீட்டிலேயே விநியோகம் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நோய்த்தடுப்பு நடவடிக்கையின் தீவிரத் தன்மையும், மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வந்த தீவிர சிகிச்சையும் ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரும் பூரண குணமடைந்து அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 24 நாள்களுக்குப் பிறகு, கரோனா தடுப்பு அலுவலர்கள் நேரடி ஆய்வு செய்தனர். இதன் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஒவ்வொன்றாக திறந்து விடப்பட்டன.
இதன் மூலம், ஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட அனைத்துப் பகுதிகளும் திறக்கப்பட்டு இன்று இயல்பு நிலைக்கு மாறியது. மேலும், ஈரோடு சகஜ நிலைக்கு திரும்பி வருவதும் அனைத்து தரப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரஜினி தனது நாடகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் - வ.கௌதமன்