தமிழ்நாடடில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், 13 வாக்குச்சாவடிகளில் பதிவான மாதிரி வாக்குப்பதிவுகளை அழிக்காமல் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக அந்த 13 வாக்குச்சாவடிகளுக்கு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவுடன், தமிழ்நாட்டில் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளுக்கு மறுதேர்தலும் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், ஈரோடு மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 248ஆவது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதற்காக இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டுக் கருவி, ஒரு விவிபேட் ஆகியவை கொண்டு செல்லப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வாக்குச்சாவடியில் 918 வாக்கார்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு புதியதாக வாக்குச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. வாக்களிப்பவர்களுக்கு இடது கை விரலில் அழியாத மை வைக்கப்படுகிறது. மேலும், திருமங்கலத்திற்கு வரும் சாலைகளில் உப்புபாளையம், ரெட்டிவலசு ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.