ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் சுமார் 10 ஏக்கருக்கும் மேலாக விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிக்கடி மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான தக்காளிகள் அழுகிப்போவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி விளைச்சலும் குறைந்துள்ளதால் சாகுபடியிலும் குறைவு ஏற்பட்டுள்ளது.
இங்கு விளையும் தக்காளிகளை விவசாயிகளிடமிருந்து மொத்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து லாரிகளில் லோடு ஏற்றி கோவை, திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட கேரள மாநில பகுதிகளுக்கும் விற்பனைக்கு எடுத்துச்செல்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி கொள்முதல் விலை 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது 23 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தக்காளி ஒரு கிலோ ரூபாய் 35 முதல் 40 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் தக்காளி பயிரிட்டு அதை பராமரித்து கூலி கொடுத்து அதை அறுவடை செய்து 7 ரூபாய் 8 ரூபாய்க்கு விற்பனை செய்யும்போது அதில் எந்த லாபமும் இல்லை என வருந்தும் நிலையில் உள்ள விவசாயிகளுக்கு 23 ரூபாய் என்பது மகசூல் குறைந்த நேரத்தில் கிடைக்கும் தொகையாகவே உள்ளது. இந்நிலையில் பெரிய அளவில் விவசாயிகள் இதில் மகிழ்ச்சி கொள்ள முடியாது என்றே கூறலாம்.
அதேபோல, வியாபாரிகள் பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்களில் பயணித்து வந்து டீசல் செலவழித்து, ஏற்று கூறி இறக்கு கூலி என அனைத்தும் கொடுத்து 23 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் தக்காளியை 35 ரூபாய்க்காவது விற்றால்தான் சிறிய அளவில் லாபம் கிடைக்கும், என்கின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் இருந்து விபத்து நடந்த இடத்துக்கு ரயில் இயக்கம் - ரயில்வே எஸ்பி பொன்ராமு