கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன.
தமிழ்நாட்டு அரசின் சார்பில் ஒரு குடும்ப அட்டைக்கு இலவச அரிசியும், ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியும் வழங்கப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம், மிட்டாய்க்காரன் வீதியில் உள்ள நியாயவிலைக் கடையில் அப்பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அரிசி பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இப்பகுதி மக்கள் அரசு வழங்கிய பொருள்களும், பணமும் தங்களுக்கு போதவில்லை என்றும் நியாயவிலைக் கடையில் வழங்கிய அரிசி தரமானதாக இல்லை என்றும் இப்பகுதியில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் அரசு வழங்கி நிவாரண உதவிகள் கிடைக்கப்பெறவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று ஈரோட்டிலிருந்து பவானி செல்லும் சாலையில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதி மக்களும் அரசின் நிவாரணப் பொருள்கள் போதவில்லை என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், மற்றும் காவல் துறையினர் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் அரசின் உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பொதுமக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் பார்க்க:ஊரடங்கில் தலைதூக்கும் தண்ணீர் பிரச்னை!