ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்து, சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடுகளுக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நோய்ப் பரவலைத் தடுத்திடவும், மீண்டும் நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காகவும் மாவட்டம் முழுவதும் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட எல்லைப் பகுதிகள், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருபவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததற்குப் பிறகே தங்களது வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையிலிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் ஈரோடு பெரியார் நகர்ப் பகுதிக்கு வந்த இளைஞர், அதே பகுதியில், வெளி மாநிலத்திலிருந்து வந்த குடும்பத்தினர் ஆகியோர் குறித்து தகவலறிந்த மாவட்ட சுகாதாரத் துறையினர் அப்பகுதிக்குச் சென்று இளைஞர், அவரது குடும்பத்தினர், வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தனிமைப்படுத்தப்பட்டப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
இதேபோல், மாவட்டம் முழுவதும் அனுமதிக் கடிதம் பெற்று வந்தவர்கள், பெறாமல் வந்தவர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களை அழைத்துச் சென்று உரிய மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மாவட்டத்திலுள்ள 15க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள், தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தி தங்க வைத்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் அனைவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சளி, காய்ச்சல், உடல்வலியுடன் வந்திருப்பவர்களுக்கு சிகிச்சை தேவைப்பட்டால், உடனடியாக பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
அனுமதிக் கடிதம் பெற்று ஈரோட்டிற்கு வந்தவர்கள், அனுமதிக் கடிதம் பெறாமல் வந்தவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்தி தங்க வைத்துள்ளதாகவும், ரத்தப் பரிசோதனை முடிவிற்கு பிறகோ அல்லது 15 நாட்கள் கழித்தோ இவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தனியார் திருமண மண்டபங்கள், தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படுவதுடன் அவர்கள் வெளியேறிச் செல்ல முடியாத அளவிற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் வெளி மாவட்டங்களிலிருந்தோ, வெளி மாநிலங்களிலிருந்தோ வந்துள்ளவர்கள் குறித்து அருகிலுள்ள வீட்டினர் தவறாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தகவல் தெரிந்தும் தெரிவிக்கத் தவறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க : சென்னையில் அதிகரிக்கும் கரோனா நோயாளிகள்: கல்லூரிகளில் தங்கவைக்க திட்டம்